போரில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு உதவியது போன்று, தற்போதைய போரிலும் இந்தியா உதவி வருவதாக, சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளை போடும் நடவடிக்கைகளை அங்கொட மருத்துவமனையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோருடன் இணைந்து தானும், இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வந்ததாகவும், லலித் வீரதுங்க நினைவு கூர்ந்துள்ளார்.
இரண்டு தரப்புகளும் இணைந்து, எல்லா விடயங்களையும் கலந்து பேசியே, வெல்லப்பட முடியாதது என்று அனைவராலும் கூறப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், வெற்றியைப் பெற முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இப்போது இன்னொரு போருக்கு உதவி வருகிறது என்றும், இந்தியா அளிக்கும் இந்த உதவிகள் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு உதவியாக அமையும் என்றும் லலித் வீரதுங்க மேலும் கூறியுள்ளார்.