வடக்கு மாகாணத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் பிரதான மருத்துவமனைகளில் ஆரம்பமாகியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் நடவடிக்கை இன்று தொடங்கியுள்ளது.
வடக்கு மாகாணத்துக்கு 11 ஆயிரம் கொரோனா தடுப்பு மருந்துகள் எடுத்து வரப்பட்ட நிலையில், இன்று மருத்துவர்கள், தாதிகள், சுகாதாரப் பரிசோதகர்கள், மற்றும் மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு இன்று காலை தொடக்கம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
யாழ். போதனா மருத்துவமனையில் இன்று காலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பணிப்பாளர், மருத்துவர் சத்தியமூர்த்தி ஆகியோர், தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.
அதேவேளை, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும், பிரதான மருத்துவ அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பு மருந்தை ஆர்வத்துடன் செலுத்தியுள்ளனர்.