இராணுவப் பயிற்சி குறித்து தான் கூறிய கருத்துக்களை, ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன என்று, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், இராணுவத்தில் எமது இளைஞர் யுவதிகள் சேர வேண்டும் என்று தான் எங்குமே கூறவில்லை என்றும், எமது மாணவ மாணவியர்க்கு அவர்கள் கல்லூரிகளில் இருக்கும் போதே இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றே குறிப்பிட்டதாகவும், விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
தன்னைப் போன்றவர்கள் கல்லூரியை விட்டு விலக முன்னர் போர்ப் பயிற்சி நெறிகளில் பாண்டித்தியம் பெற்றதைப் போல, கல்லூரிகளில் இருக்கும் போதே எமது மாணவ மாணவியர் பயிற்சிபெற வேண்டும் என்றே கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைப் புரிந்து கொள்ளாமல், எமது இளைஞர்களை இராணுவத்தில் சேருங்கள் என்று நான் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது அபத்தமானது என்றும், விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.