தமிழர் தாயகத்தில் நடைபெறும் தமிழின இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் முன்னெடுக்கப்படவுள்ள பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு, எமது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் அணியினர் தெரிவித்துள்ளனர்.
இப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்த வகையில் எதிர்வரும் 3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை நடாத்தப்படும் அகிம்சை போராட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சின் இளைஞர் அணி ஆதரவு வழங்கும் என்பதுடன் குறித்த போராட்டத்தில் வடகிழக்கில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி இளைஞர் அணி அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களின் குரலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களுடன் பயணிக்கும் என்பதை இந்த போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவ்வணியினர் தெரிவித்துள்ளனர்.