சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் சீனா தலையிடாது என்றும், அதுபோல ஏனைய நாடுகள் தலையிடுவதையும் விரும்பாது என்று, கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப் பேச்சாளருமான லு சொங் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கை குறித்து, தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“மனித உரிமை விவகாரங்கள், மற்றும் இன முரண்பாடுகளுக்கான தீர்வு என்பன, சிறிலங்காவின் உள்ளக விடயங்களாகும்.
இதில் சீனா ஒருபோதும் தலையீடு செய்யாது. ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது.
உலகின் எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களிலும், பிற நாடுகளோ அல்லது சக்திகளோ தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது.
இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது நிலைப்பாடு அமையும்.
மனித உரிமைகள் விவகாரம், அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
அரசியல் மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் விடயத்தை நாடொன்றுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது” என்றும் சீனத் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.