கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நூறுவீத உரிமமும் துறைமுக அதிகார சபை வசமே இருக்க வேண்டும், இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்த தரப்பினருக்கோ சிறிதளவேனும் விட்டுக்கொடுக்க முடியாது என ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பத்து அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தை பாதுகாக்கும் முழுமையான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்து பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நிலையில் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பத்து அரசியல் கட்சிகள் இன்று ஒன்றிணைந்து இது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பிற்கு அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ விதாரண உள்ளிட்ட பத்து கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டமை முக்கிய விடயமாகும்