அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, இன்று மதியம் 12 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.
அவர் காரின் முன் பகுதியில், அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் என்பதால் தான் அதிமுக கொடி பொருத்தப்பட்டது என்றும், அதற்கான எல்லா உரிமையும் அவருக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கட்சியிலேயே இல்லாத சசிகலா, சட்டவிரோதமாக அதிமுக கொடியை பயன்படுத்துவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே, அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் தெரிவித்துள்ளனர்.