2019ஆம் ஆண்டு மே மாதம் சிறிலங்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் சிறிலங்கா செயற்படுமென எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் நாட்டின் தலைமை அது தொடர்பில் அறிவித்திருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா வின் அமைச்சரவை கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தீர்மானித்திருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் பிரகாரம் செயற்படவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.