கிழக்கு கொள்கலன் முனையத்தை சிறிலங்கா துறைமுக அதிகார சபையே முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நீடித்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஜப்பான் மற்றும் இந்தியாவின் முதலீட்டுடன் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இந்த இணக்கப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்த சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்திய நிறுவனம் 49 வீத முதலீட்டைச் செய்யும் என்றும் அறிவித்திருந்தார்.
இதற்கு எதிராக, தொழிற்சங்கங்கள், பெளத்த பிக்குகள், அரசியல்கட்சிகள் போர்க்கொடி உயர்த்திய நிலையில், இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கிழக்கு முனையம் 100 வீதம் துறைமுக அதிகாரசபையிடமே இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3 கட்டங்களாக 3 ஆண்டுகளில் இந்த அபிவிருத்திப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, மேற்கு முனையத்தை இந்தியாவின் முதலீட்டில் அபிவிருத்தி செய்யலாம் என்றும் அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெற்கு முனையம் சீனாவின் முதலீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டதைப் போன்ற வர்த்தக உடன்பாட்டின் கீழ் மேற்கு முனையத்தை கட்டலாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.