திருச்சி வானூர்தி நிலையத்திற்கு குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை திருச்சி வானூர்தி நிலைய மேலாளருக்கு, தொலைபேசி அழைப்பு எடுத்த பெண் ஒருவரே, குண்டுத் தாக்குதல் குறித்து அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, வானூர்தி நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன், உடனடியாக வானூர்தி நிலைய பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குண்டுகளை செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்பநாய் மூலம் வானூர்தி நிலையம் முழுவதும், சோதனையில் ஈடுபட்ட போதும், குண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து, அச்சுறுத்தல் விடுத்த பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.