வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், “யுத்த காலத்திலும் அதற்குப் பின்னரான தற்போதைய காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எவ்வித கொடுப்பனவுகளும் இல்லாமல் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள், சேவை அடிப்படையில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றி வருகின்றனர்.
எனவே, எமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி கடந்த பல வருடங்களாக நாம் தொடர்ச்சியான போராட்டங்களை நாம் முன்னெடுத்து வந்திருந்தோம்.
ஆயினும், எங்களுடைய கோரிக்கைகளுக்கு உரிய தரப்பினர் செவிசாய்க்காத நிலையில் மீண்டும் நாம் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
எனவே, வடக்கில் நீண்ட காலமாக தொண்டராசிரியர்களாக இருக்கின்ற எங்களுக்கான நிரந்தர நியமனத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க வேண்டும் எனக் கோரி மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக மீண்டும் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம் என்று குறிப்பிட்டனர்.