கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தாயகத்தில் நடைபெறும் பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான நடைபேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக கவனயீர்பு நடைபெறவுள்ளது.
தமிழ் இனஅழிப்பை தொடரும் இனவாத சிறிலங்கா அரசின் முன்னெடுப்பில் சுதந்திர நாளை பெப்ரவரி 4 ல் கொண்டாடும் அதே நாளில் உலகெங்கும் வாழும் தமிழீழ தேசிய மக்கள் ஆண்டு தோறும் அதே நாளை துக்க நாளாக நினைவு கூறுவது வழக்கம்.
தமிழீழ மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு, தமிழர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்களமயமாக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தொடர்ச்சியாக பல வழிகளிலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
இவை அனைத்தையும் தொடர்ச்சியாக நிறைவேற்றி வரும் சிறிலங்கா அரசு சுதந்திரமடைந்த நாளை நாம் அனைவரும் வலி சுமந்த துக்க நாளாக ஆண்டு தோறும் நினைவு கூறுவது போல் இவ்வாண்டிலும் உறுதியுடன் நினைவு கூறுவோம்.
அந்த வகையில் கனடிய மண்ணில் பெப்ரவரி 4 அன்று தொடர்ச்சியாக இடம் பெறும் இன அழிப்பில் பாதிக்கப்பட்ட எம் மக்களை நினைவு கூருவதற்கு தலைப்பட்டிருக்கின்றோம்.
தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” கவனவீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் அடையாள கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் ஆதரித்தும், நாம் இங்கு ரொரன்ரோ வீதிகளில் இன அழிப்பை காட்சிப்படுத்தும் பாரஊர்திப்பவனிக் கவனவீர்ப்புப் போராட்டம் மற்றும் வாகனங்கள்,வியாபாரதளங்கள் போன்றவற்றில் கறுப்பு கொடிகளை கட்டியும் வேலைக்கு செல்வோர் கறுப்பு பட்டி அணிந்து வேலைத்தளங்களுக்கு செல்லுமாறும் வேண்டுகின்றோம்.
கொரோனா முடக்க நிலை காரணமாக வழமை போல் போராட்டத்தில் மக்கள் பங்கேற்க முடியாத காரணத்தால் கனடா வாழ் தமிழ் உறவுகள் வீதியில் இறங்கிப் போராடாவிட்டாலும் பொதுத் தளங்களில் பரப்புரைக் போராட்டம் செய்து உலகெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகளையும் இணைத்து அனைத்துலகமட்டத்தில் இன அழிப்பு அரசை இந்நாளில் அம்பலப்படுத்தும் பணியில் ஒன்றிணைவோம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.