சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ்பேசும் உறவுகளும் ஓரணியில் திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழர்களின் உரிமைப் போராட்டங்களை மதிக்காத சிறிலங்கா அரசு, தமிழர்கள் மீதான அடக்குமுறைகளையும், இன அழிப்பு நடவடிக்கைகளையும் பகிரங்கமாக மேற்கொண்டு வருகின்றது.
அரசின் கொடூரங்களால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்கு ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று கோரி முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்பேசும் உறவுகள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எமது அவலக் குரல்கள் சர்வதேசத்தின் மனச்சாட்சிகளைத் தட்டும் அளவுக்கு எமது போராட்டத்தை பெரும் போராட்டமாக அஹிம்சை வழியில் முன்னெடுக்க வேண்டும்” – என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.