காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கறுப்பு பட்டியணிந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் சுதந்திர தினமான இன்று, வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு போராடும் உறவினர்களால் கரிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்ட இடத்துக்கு சென்ற யாழ்ப்பாணம் காவல்துறையினர், நீதிமன்றத் தடை உத்தரவை வாசித்துக் காண்பித்து போராட்டத்தைக் கைவிட்டு அகன்று செல்லுமாறு வலியுறுத்தினர்.
எனினும் நீதிமன்றக் கட்டளையில் பெயர் குறிப்பிடப்பட்ட எவரும் ஆர்ப்பாட்டத்தில் இல்லாமையால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்தனர்.
போராட்டத்தைத் தடுக்க காவல்துறையினர் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அங்கஜன் இராமநாதனுடன் இணைந்து போட்டியிட்ட ஆவா குழு முன்னாள் உறுப்பினர் ஒருவரின் தலைமையில் சிறியதொரு ஊர்வலம் நடத்தப்பட்டது.
அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்ற இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை கட்ட அனுமதிக்கப் போவதில்லை என்றும் முழக்கம் எழுப்பியுள்ளனர்.