உகண்டாவின் போராளிக் குழுவின் முன்னாள் தளபதியான, டொமினிக் ஒங்வென் (Dominic Ongwen) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் நேற்று இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பலவந்தமாக கர்ப்பமாக்குதல் என்ற குற்றச்சாட்டிலேயே, எல்ஆர்ஏ (LRA) எனப்படும் போராளிக் குழுவின் தளபதியான, டொமினிக் ஒங்வென் (Dominic Ongwen) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மனித குலத்துக்கு எதிரான, போர்க்குற்றங்களை இழைத்தார் என்று இவர் மீது 70 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், 61 குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டுள்ளார்.
உகண்டாவில் 2004ஆம் ஆண்டு நான்கு உள்நாட்டு அகதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் இவருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், பாதிக்கப்பட்ட 4ஆயிரம் பேர் சாட்சியமளித்திருந்தனர்.
இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள டொமினிக் ஒங்வென் (Dominic Ongwen) னுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.