கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய விவகாரம் தொடர்பாக, கொழும்பில் உள்ள இந்திய தூதுவர், தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அனுராக் சிறிவத்சவா புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடப்பாடுகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து, கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் கோபால் பாக்லே, சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசின் இந்த முடிவு இந்தியாவின் ஏனைய அபிவிருத்தி திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா, அல்லது மேற்கு முனையத்தை வாங்குவதில் இந்திய ஆர்வமாக உள்ளதா என்ற கேள்விக்கு அ அனுராக் சிறிவத்சவா பதிலளிக்க மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும், “இந்தியா மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டு, துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில், சிறிலங்காவின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது பரஸ்பர நன்மை பயக்கும் என்று உண்மையிலேயே நம்புகிறோம்” என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.