பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெறும், மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்கு தடை விதிக்க சாவகச்சேரி மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்தத் தடை உத்தரவு கோரி, சிறிலங்கா காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த விண்ணப்பம் நீதிமன்றினால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மல்லாகம் நீமிவான் நீதிமன்றத்தில் சுன்னாகம், காங்கேசன்துறை மற்றும் அச்சுவேலி காவல்துறையினர்ரால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பங்களும் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை பேரணி, பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நுழைவதற்கு, இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஏற்று, பருத்தித்துறை நீதிவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினரின் விண்ணப்பத்துக்கு மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தனர்.
எனினும், இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் காயத்திரி சைலவன், பேரணியில் பங்கேற்போர் பல மாவட்டங்கள் ஊடாக அங்குள்ளவர்களையும் இணைத்து வருவதனால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த தடை உத்தரவு வழங்கப்படுகிறது கட்டளையிட்டுள்ளார்.