முயற்சி செய்யாமல் எதுவும் கிடைக்காது எனவும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மூலம் மக்கள் தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எனவே, திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் சம்பள உயர்வு தொடர்பாக சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற கடையடைப்புப் போராட்டம் ஆகியன தொடர்பாக அட்டனில் இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேவேளை, தங்களுக்கான நாட் சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பிலும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனால் மலையகம் முழுவதும் இன்று ஸ்தம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.