ஜனநாயக நிறுவனங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கடினமான முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், கடந்த கால குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் நிபுணர்கள், சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள், சிறிலங்காவுக்கு மேற்கொண்ட 10 பயணங்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 400 பரிந்துரைகள் வரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. நாட்டில் சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்பை அதிகரிப்பதற்கான முயற்சிகளைத் தொடரவும், கடந்த காலகுற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் மனித உரிமைகள் பேரவையிடம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.