உலகெங்கிலும் தமிழர்கள் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை புறக்கணித்து, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டையும் சிறிலங்காவின் தொடர்ச்சியான தமிழ் இனஅழிப்பை நிறுத்துவதற்காக தடைகளையும் கொண்டு வரக்கோரி மாசி 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரை நடைபெறும் அமைதிவழிப் பேரணிக்கு உலகத் தமிழர்களின் பேராதரவு வழங்கியுள்ளனர்.
கனடிய தமிழர் தேசிய அவை உட்பட பத்து புலம்பெயர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையிலேயே இந்த ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பொலிகண்டி நோக்கிய அமைதியான ஆர்ப்பாட்ட ஊர்வலமானது சிறிலங்காவின் சுதந்திர தினமான மாசி மாதம் 4ஆம் திகதியை ஒரு கரிநாளாக கடைப்பிடித்துள்ளது.
சிறிலங்கா 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து தமிழ் மக்கள் அனுபவித்து வரும் தமிழ் மக்களிற்கு எதிரான அடக்குமுறை, தமிழர்ளின் அடையாளங்களை அழித்தல் மற்றும், மறுக்கப்படும் தனிமனித சுதந்திரம், அரசியல் சுதந்திரம், பாதுகாப்பு, சமத்துவம், நீதி ஆகிய காரணங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அமைதியான ஆர்ப்பாட்ட ஊர்வலமானது சிறிலங்கா அரசால் நடாத்தப்பட்ட மாபாதக குற்றங்களுக்கு எதிரான நீதி வழங்குவதில் தாமதம், தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக வைத்திருத்தல், மக்களுக்கான நிர்வாக சேவைகளில் இராணுவத் தலையீடு, அரசியல் கைதிகளை காலவரையறை இன்றி சிறையில் வைத்திருத்தல், தொல்லியல் ஆராட்சி என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு, புத்த சமயத்தவர் வசிக்காத தமிழர் பகுதிகளில் புத்த சின்னங்களை அமைத்தல் ஆகியவற்றை கண்டிக்கின்றது.
மேலும் தமிழர் நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்துதல் தமிழர் பாரம்பரிய நில உரிமைகளை மறுப்பதோடு கால்நடைகளின் மேய்ச்சல் நில உரிமை மறுத்தல், பொதுஅமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் மேல் அதிகரிக்கப்பட்டுள்ள மிரட்டல்களும் கண்காணிப்புக்களும், கொரோனாவை காரணம் கூறி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ இறுதிச் சடங்கு உரிமைகளை மறுத்தல் மற்றும் போரில் இறந்த உறவுகளுக்கான நினைவு அஞ்சலி செலுத்துவதை மறுத்தல் போன்ற விடயங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக நடைபெறுகின்றது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமைக் கழக உயர் ஸ்தானிகரின் பரிந்துரையின் அடிப்படையில் மார்ச் 2021 மனித உரிமைகள் கழகத்தின் 46வது அமர்வில் புதிய தீர்மானத்தை நிறைவேற்றுமாறு 47 உறுப்பு நாடுகளையும் தாயகத்து தமிழ் பேசும் மக்களும் புலம்பெயர் தமிழ் பேசும் மக்களும் வேண்டுகின்றோம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.