பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணி இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம், மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து பசார் வீதி வழியாக ஹொரவப்பொத்தானை நோக்கி பயணித்தது.
வவுனியாவில் கடந்த நான்கு வருடங்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்களின் பந்தலுக்கும் பேரணி சென்றது.
பேரணி வவுனியா பெரிய பள்ளிவாசலை சென்றடைந்த போது, அங்கிருந்த மக்கள் பேரணியுடன் இணைந்து பயணித்தனர்.
ஹொரவப்பொத்தானை வீதியை சென்றடைந்த பேரணி பண்டாரவன்னியன் சிலையடியில் முற்றுப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி வவுனியாவிலிருந்து மன்னாருக்கு பயணித்தது.
பிரதான வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், பல்வேறு தடைகளையும் கடந்து மன்னார் நகரை அடைந்தது.
பேரணி மன்னார் குஞ்சுக்குளம் காவல்துறை சோதனைச் சாவடியில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டளை வாசிக்கப்பட்டதன் பின்னர் மன்னாருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிரதான பாலத்திலிருந்து மன்னார் நகர பகுதியிலுள்ள தந்தை செல்வா சிலை வரை ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் சர்வ மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் மன்னார் மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்களும் பங்கேற்றனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி யாழ் மன்னார் பிரதான வீதியூடாக வௌ்ளாங்குளம் நோக்கி பயணித்தது.
பின்னர் அங்கிருந்து முழங்காவில் பகுதிகளின் ஊடாக கல்விளான் பகுதிக்குப் பேரணி சென்றுஇ அங்கு மதிய உணவு ஏற்பாட்டினைத் தொடர்ந்து தற்போது மல்லாவியைச் சென்றடைந்து அங்கிருந்து மாங்குளம் வழியாக முறிகண்டியை அடைந்தது. பின்னர் அங்கிருந்து இரணைமடுவை வந்தடைந்த பேரணியானது கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாலையில் நிறைவடைந்தது.