வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில், 11 பேர் மன்னார் முசலியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 403 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதிலேயே 14 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் நால்வர் முசலி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் முசலியில் அண்மையில் கொரோனாவால் உயிரிழந்தவருடன் தொடர்புடையவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அண்மையில் முசலி வாடியில் தொழிலாளி ஒருவருக்குக் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய ஏழு பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனைவிட, கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா செட்டிக்குளம் வைத்தியாலையில் சேர்க்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவர் கேதீஸ்வரன் கூறியுள்ளார்.