எதிரிக்கு முன்பாக, திறந்த வெளியை கடப்பது ஆபத்தானது என்பதை சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நினைவுபடுத்துவதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“1991ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கோட்டையைக் காப்பாற்றுவதற்கான போரில், நீங்கள் எதிரிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு, திறந்த வெளியைக் கடந்து ஆபத்தில் சிக்கியபோது, உங்களையும் உங்கள் படையணியையும் நான் உட்பட முதலாவது சிங்கப் படைப்பிரிவினரே காப்பாற்றினோம்.
30 ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது, அரசியல் அரங்கில், நீங்கள் மீண்டும் அதே தவறை செய்ய மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் முகாமின் கட்டளையும் கட்டுப்பாடும் உடைந்து விட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
உங்களுக்கு வாக்களித்த 69 மில்லியன் மக்களை கேலி செய்வதன் மூலம், நீங்கள் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
உங்கள் அதிகாரப் பசி ஆட்சி அந்த சக்தியால் அழிக்கப்படும்.
எனவே, கோட்டாபயவுக்கு எனது அறிவுரை என்னவென்றால், நாடு பெரும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், நான் உட்பட பொது எதிர்க்கட்சியின் அரசியல் தலைவர்கள் மற்றும் நண்பர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கக்கூடாது, இது பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை அதிகரிக்கச் செய்யும்” என்றும் சரத் பொன்சேகா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.