இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை அமைக்கும் உடன்பாட்டை சீன நிறுவனத்துக்கு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் டொலர் நிதியுதவியில், கலப்பு மின் நிலையங்களை அமைக்கும் திட்டத்தை சீன நிறுவனத்துக்கு வழங்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
இதற்கு அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, இந்த ஒப்பந்தத்தை செயற்படுத்தும் பொறுப்பு சீன நிறுவனத்திடம் இன்னமும் அதிகாரபூர்வமாக கையளிக்கப்படவில்லை என்று, சிறிலங்கா மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கரிசனை மற்றும், புவிசார் அரசியலில் சிக்கியுள்ள இந்த திட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து, சிறிலங்கா அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்றும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.