பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா என்ற நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கு இன்று கூடிய வேதன நிர்ணயசபை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 900 ரூபாவும், பாதீட்டு சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்குவதற்கான யோசனையைத் தொழில் ஆணையாளர் முன்வைத்தார்.
இதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளியிட்டநிலையில், இந்த வேதன தொகைக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த தொகைக்கு ஆதரவாக 11 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவிப்பு ஒருவாரத்தில் வெளியாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான உறுதிமொழியை அரசாங்கம் வழங்கி இருந்ததுடன், அதற்கான பொறுப்பு தொழிற்துறை அமைச்சரான நிமல் சிறிபால டி சில்வாவுக்கு வழங்கப்பட்டிருந்தது.