கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணிக்கு மீண்டும் மீண்டும் சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் சிறிலங்கா ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணிக்கு தெரிவு செய்யப்பட்ட அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள்.
கிழக்கு மாகாண விகிதாசாரத்திற்கு ஏற்றவாறு பெரும்பான்மையான தமிழர்கள் தெரிவு செய்யப்பட வேண்டுமென மக்கள் பிரதிநிதிகளும், இவ்விடயத்தில் அக்கறை உடையவர்களும், கோரிக்கை விடுத்திருந்ததனர்.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்று சென்றவர்களுக்குப் பதிலாகவும் மேலும் புதிதாக ஐந்து பேர் சிங்கள இனத்தைச் சார்ந்தவர்களே தெரிவு செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இனவாத அரசின் ஜனாதிபதி தொடக்கம் சாதாரண மக்கள் பிரதிநிதிகள் வரையும், பௌத்த மத குருமார்கள், அரசபடையினர் போன்றோர் இந் நாட்டை பௌத்த நாடாக மாற்றுவதற்கு முற்படுகின்றனர்.
தமிழர்களாகிய நாங்கள் தமிழர்களுக்குரிய புராதான அடையாளங்களை விட்டுக் கொடுப்பதற்கு எச் சந்தர்ப்பத்திலும் துணை போக முடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.