வடக்கில் உள்ள தீவுகளில் பணியாற்றும் மருத்துவத் துறையினருக்கு, சிறப்பு கொடுப்பனவுகளை வழங்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தீவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதிகள், சுகாதார துறையினருக்கு, விசேட கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண சபையே தீர்மானிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குடாநாட்டில் காணப்படும் தீவுகளில் சுகாதார சிக்கல்கள் அதிகமாக காணப்படுவதாகவும் இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.