மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்தி வந்தனர் என ஆறு பேருக்கு எதிராக றோயல் கனடிய காவல்துறையினரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ரொறன்ரோ, மொன்ட்றியல் (Montreal), ஹமில்டன் (Hamilton) வானூர்தி நிலையங்கள் வழியாக, விருந்தினர்கள் என்ற போர்வையில் வெளிநாட்டவர்கள் கனடாவுக்குள் நுழைந்துள்ளனர்.
இதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரினாலும் இயக்கப்படும், வேலைவாய்ப்பு முகவரகங்களின் ஊடாக வேலைகளில் இணைந்துள்ளனர்.
றோயல் கனடா காவல்துறை, மற்றும் கனடா எல்லை சேவை முகவர் அமைப்பு என்பன இணைந்து நடத்திய விசாரணைகளில், இந்த தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
2019 ஜூலை தொடக்கம் செப்ரெம்பர் வரையான காலப்பகுதிக்குள், ஒன்ராறியோவில் ஹமில்டன், மில்டன் பகுதிகளில் 80 வெளிநாட்டவர்கள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மனிதக் கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மார்ச் 8ஆம் நாள் நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டுள்ளது.