சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை தடுக்கவே பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி 10 அம்சக் கோரிக்கைகளை சிறிலாங்கா அரசிடம் முன்வைத்து நடைபெற்றதாக சுமந்திரன் நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் மூலம் தமிழ் மக்களைக் கொச்சைப்படுத்தி, தமிழ் மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்துள்ளார் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னபலம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் ஐந்து நாட்களாக பொத்துவிலில் தொடங்கிய பேரணி ஏறத்தாள ஒரு லட்சம் மக்களது பங்களிப்புடன் நகர்ந்து, இறுதி நிகழ்வில் ஏறத்தாழ அறுபதாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அந்த எழுச்சிப் போராட்டம் நடைபெற்றிருந்தது.
அந்த நடைபயணத்தினுடைய அடிப்படைக் கோட்பாடுகளாக தமிழ்கட்சிகளும் வடக்கு கிழக்கு சிவில் சமூகமும் கடந்த மாதம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளருக்கும், மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கும், மனித உரமைகள் பேரவையினுடைய உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்பிய அந்தக் கடிதத்தில் கூறப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியே இந்த நடைபயணம் நடைபெற்றது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள், வெறுமனே ஒரு சில அரசியற்கட்சிகளதோ, அல்லது ஒரு சில அமைப்புக்களதோ கோட்பாடுகள் அல்ல. மாறாக ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் ஏகோபித்த கோரிக்கையாக இருக்கின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் தான், இந்த நடைபயணம் நடாத்தி முடிக்கப்பட்டது.
இருப்பினும் சுமந்திரன் அந்தப் போராட்டத்தினை பலவீனப்படுத்தும் வகையிலேயே கருத்து வெளியிட்டுள்ளார். இதனை சாதாரணமாக கருத்தில் கொள்ளாது விடமுடியாது. நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.