பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் அபிலாசையை பெற்றுக்கொள்ள, நீதியை பெற்றுக்கொள்ள, அறத்தின் வழி உரிமையை பெற்றுக்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டிய தேவை இன்றைய காலம். ஈழத்தமிழர்களாக மட்டுமல்லாமல் அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டிய தேவையிருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்விற்கு முன்பாக எமது மக்களின் மன உணர்வுகளை, கட்சி, தனிநபர்களை முன்னிறுத்தாமல் வெளிக்கொணர வேண்டிய தேவையிருந்தது.
மட்டக்களப்பை சேர்ந்த சிவயோகநாதன் என்னை தொடர்பு கொண்டு, இந்த போராட்டத்தை செய்ய வேண்டுமென்றார். இதன்படி வடக்கு மாகாணத்தில் நானும், கிழக்கு மாகாணத்தில் அவரும் கூட்டங்களை ஒழுங்கு செய்தோம் காலம் குறைவாக இருந்ததால், 50 பேர் வரை பேரணிக்கு வர மாட்டார்கள் என பலர் கூறினார்கள். இவ்வளவு நடந்த பின்னும், பூகோள நிலைமையில் சாதகமான அம்சங்கள் இருக்கும் காலத்தில், இன்றும் கட்சி, தனிநபர் சார்ந்து சிந்திக்கிறார்களே, யார் வந்தாலும் வராவிட்டாலும், நானும், சிவயோகநாதனும் மட்டுமே என்றாலும் இந்த பேரணியை நடத்துவதென ஓர்மம் கொண்டிருந்தேன் என்று அவர் குறிப்பிட்டார்