ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில், அனுசரணை நாடுகளுடன் இணைந்து, ஒருமித்த தீர்மானத்திற்கான, மாற்று வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் ஜெனிவா கூட்டத்தொடரில், சிறிலங்கா அரசாங்கம் சொந்த தீர்மானத்தை முன்வைப்பதற்கான வாய்ப்புக் குறித்து கவனித்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகள், சிறிலங்கா தொடர்பான புதிய தீர்மானத்தை முன்வைக்கப் போவதாக அறிவித்துள்ளன.
எனினும், சிறிலங்கா அரசாங்கம், ஆரம்பத்தில் இந்த இணக்கத் தீர்மானம் குறித்து அனுசரணை நாடுகளின் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள போதிலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா வெளியுறவு அமைச்சு, மேலும் அவகாசம் கோருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அனுசரணை நாடுகளின் குழுவுடன் ஒருமித்த தீர்மானம் சாத்தியமில்லை என்றும், ஏனென்றால், சிறிலங்கா அரசாங்கம் மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். என்றும், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த வாய்ப்பு இன்னமும் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.