பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2014இல் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே, ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத மற்றும் இனரீதியிலான குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு காரணமான நடவடிக்கைகளில் ஈடுபட உதவிய நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளம் காண்பதற்கு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையிலேயே ஆணைக்குழு ஞானசார தேரருக்கு எதிராக, குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும், இதுகுறித்து தனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.