கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் எம்மை ஏமாற்றிவிட்டார் என கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி உண்ணாவிரதம் இருந்த ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனது அரசியல் வாழ்க்கை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 2019 ஆண்டு ஆரம்பமாகியது. அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடியுள்ளேன்.
அதன் பின்னர் தற்போதைய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நம்பிக்கை ஊட்டக்கூடிய வாக்குறுதிகளை என்னிடம் வழங்கியதை தொடர்ந்து அவரின் அரசியல்பால் ஈர்க்கப்பட்டு பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நேரடியாகவும் மேடைப்பேச்சு சமூகவலையமைப்பின் ஊடாகவும் பிரசாரங்களை அவரின் தேர்தல் வெற்றிக்காக மேற்கொண்டிருந்தேன்.
தற்போது இராஜாங்க அமைச்சருடன் கல்முனை பிரச்சினை தொடர்பாக எழுந்த விடயங்கள் தொடர்பில் முரண்பட வேண்டி இருந்தது. எனக்கு வந்த அழுத்தங்களால் தான் தற்போது இராஜாங்க அமைச்சருடன் உள்ள சகல தொடர்புகளையும் துண்டித்து விலகியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.