ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை மெய்நிகர் முறையில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் வரும் 22ஆம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, மெய்நிகர் முறையில் நடத்துவதற்கு, ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்று தொடர்பான, பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய, பாதுகாப்பான முறையில் கூட்டத்தொடரை நடத்த வாய்ப்பு உள்ள போதிலும் பல நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையிலும், மெய்நிகர் முறையில் நடத்துவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முடிவு செய்துள்ளார்.
ஜெனிவா கூட்டத்தொடரில் எத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்வதற்கும் சிறிலங்கா தயாராக உள்ளது.
பல நாடுகள், சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதாக, ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் உறுதியளித்துள்ளன.
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், நாட்டின் பெயரைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்தப் பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.