சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி, எதிர்வரும் முதலாம் நாள், வடக்கில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று நடத்திய ஊடகவியாளர்கள் சந்திப்பின்போது, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
“சிறிலங்கா அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக் குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு அனுசரணை நாடுகள் பரிந்துரைக்க வேண்டும்.
உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ சிறிலங்காவில் பொறுப்புக்கூறலை உண்மையாகக் கையாள எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல அனைவரும் அணி திரள்வோம்.
இந்த மாபெரும் போராட்டத்திற்கு மத குருக்கள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புக்கள் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்குமாறு வேண்டி நிற்கிறோம்.
எதிர்வரும் திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகும் இந்தப் போராட்டம், பழைய மருத்துவமனையைச் சென்றடையும்.” என்றும், அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.





