அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் இன்று அறிவிப்பார் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் பிரேரணை, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசும் காணொளி வெளியாகியுள்ளது.
பா.ம.க. நிறுவனரும், அவரது தந்தையுமான மருத்துவர் ராமதாசுடன் பேசிய அவர், 40 ஆண்டு கால போராட்டம் வெற்றி பெற்றதாக கண்ணீர் மல்க கூறினார்.
தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது 40 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
மேலும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. உறுதியாக இருப்பதாகவும், அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.