ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை சிறிலங்காவை சர்வதேச மேற்பார்வைக்குள் வைத்துக் கொள்வதற்கு போதுமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்ற போது, 20 நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாக உரையாற்றியுள்ள போதும், அவற்றில் 10 நாடுகளே வாக்களிக்கும் தகுதியை கொண்டிருக்கின்றன.
பிரித்தானியா, ஜேர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் சிறிலங்கா தொடர்பான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடும் இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.
இணை அனுசரணை நாடுகளில் புதிதாக மலாவி என்ற நாடு இணைந்து கொண்டுள்ளது.
இதனால் பேரவையின் தென்பகுதிப் பிரிவு நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதால், பிரேரணையை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்தை மிகவும் திட்டவட்டமாக இந்தியா வெளிப்படுத்தியிருப்பது, எமக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதுடன் உற்சாகமூட்டுவதாக உள்ளது.
பிரேரணையில் முழுமையான பொறிமுறை என்ற பதம் இடம்பெற்றுள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மட்டுமே அவ்வாறு ஒரு முழுமையான பொறிமுறை காணப்படுகிறது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற சொற்பதம் குறிப்பிடப்படவில்லை என்பதால், இது வலுவற்றது என்று கூறிவிட முடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





