முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக ‘மக்கள் அறம்’ என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை பரிந்துரை செய்துள்ளது.
இதற்கான சட்ட இயலுமை உள்ளதா என, சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவாவை எமது செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கான வழிவகைகள் இருப்பதாக தெரிவித்தார்.
19 ஆம் திருத்தச் சட்டத்துக்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர், தாம் பதவி வகித்த காலக்கட்டத்தில் அரச முறையில் அல்லது தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
19 ஆம் திருத்தச் சட்டத்திலும் அவ்வாறே இருந்தாலும், மனித உரிமை மீறல்கள் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருந்தது.
20 ஆம் திருத்தச் சட்டத்திலும் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக வழக்குத்தொடர முடியாது என்ற விடயம் உறுதியாக கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் ‘மக்கள் அறம்’ என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக வழக்கு தொடர முடியும். ஆயினும், இந்த விடயத்தில் நீதிமன்றமே தீர்மானம் எடுக்கும் என்று சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.