யாழ்ப்பாணக் குடாநாட்டில் இதுவரையில்லாத வகையில், நேற்று ஒரே நாளில் 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இரண்டு ஆய்வுக்கூடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளின் போது, 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில், 51 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஆசிரியை ஒருவருக்கும், யாழ். போதனா மருத்துவமனையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கும், தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 3 நோயாளிகளுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொடிகாமம் தெற்கு, பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 81 வயதுடைய பெண் ஒருவர் மற்றும், அவரது பேரனுக்கும் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
அதேவேளை, மன்னார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.