முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு கிராமத்தில் தனது காணியை துப்பரவு செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரை, பௌத்த பிக்கு தலைமையிலான தொல்லியல் திணைக்கள குழுவினர் அச்சுறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
குமுழமுனை – தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் தமக்குச் சொந்தமான விவசாய நிலத்தை, பேரானந்தம் என்ற விவசாயி, துப்பரவு செய்யும் வேலைகளை நேற்று முன்னெடுத்திருந்தார்.
இதன்போது அங்கு சென்ற பௌத்த பிக்கு ஒருவர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, குறித்த இடங்கள் அனைத்தும் குருந்தூர்மலைக்கு சொந்தமான தொல்லியல் பிரதேசம் என்றும், 500 ஏக்கர் புராதன பூமியில், எந்த வேலைகளிலும் ஈடுபட முடியாது என்றும், தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு காவல் நிலைய அதிகாரிகள், மற்றும் வன வள திணைக்களத்தினரை அழைத்து, காணி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்ட அவர்கள், காணியை துப்பரவு செய்யவும் தடை விதித்துள்ளனர்.
இதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.