சீனா, பாகிஸ்தான் எல்லை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளைக் கண்காணிப்பதற்காக செலுத்தப்பட்ட சிந்து நேத்ரா என்ற செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ஏவுகலம், 19 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய சிந்து நேத்ரா என்ற செயற்கைக்கோளும் இதில் அடங்கியிருந்தது.
இந்திய பெருங்கடல் பகுதியில், போர் கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தானியங்கி முறையில், இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் இந்த செயற்கைக்கோள், தரையில் உள்ள கட்டுப்பாட்டு தளங்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கி விட்டது என்றும், இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தென்சீன கடல் பகுதி அல்லது ஏடன் வளைகுடா பகுதி மற்றும் ஆபிரிக்க கடலோர பகுதிகளையும், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளையும் இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.