மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, காவல்துறையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மியன்மாரின் பிரதான நகரமான யாங்கோன் மற்றும் பல்வேறு பகுதிகளில் இன்று தீவிரமான மக்கள் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் யாங்கோன், (Yangon), டாவேய் (Dawei) மற்றும் மாண்டலே ( Mandalay ) போன்ற இடங்களில் பேரணிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்றும், கைக்குண்டுகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களில், குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் 30இற்கும் அதிகமானோர் இந்தச் சம்பவங்களில் காயமடைந்துள்ளனர் என்றும் ஐ.நா தகவல்கள் கூறுகின்றன.