சிறிலங்காவின் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிககைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக அம்பிகை செல்வகுமார் ஆரம்பித்திருக்கும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
கடந்த இரு தினங்கள் போலவே, மும்மத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் அதி உயர் தியாகங்களை புரிந்த,தியாக தீபங்களான அன்னை பூபதி, திலீபன் அவர்களை வணங்கி அம்பிகை செல்வகுமார் இன்றைய தினத்தை தொடர்ந்துள்ளார்.
இன்றைய நாளுக்கான நிகழ்வுகள் மாலை மூன்று மணிக்கு தொடர்ந்து நேரலை மூலம் நடைபெற இருக்கின்றன.
மத தலைவர்களின் ஆசி உரைகள், அம்பிகை செல்வகுமார் அவர்களின் உரை, அரசியல் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சிறப்புரைகள் மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
தற்போது உள்ள கொரோனா நடைமுறைகள் காரணமாக, உறவுகள் நேரில் சமூகளிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,
இதேவேளை, இன்றையதினம் எமது வானொலிக்கு வழங்கிய செவ்வியின்போது, தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் போராட்டத்தினைக் கைவிடப்போவதில்லை என்றும், தற்போது வரையில் பிரித்தானிய அரசு எவ்விதமான சந்திப்பு முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என்றும் அம்பிகை செல்வகுமார் குறிப்பிட்டார்.
மேலும் இளைஞர்கள் இந்தப் போராட்டத்திற்கான ஆதரவினை தெரிவிக்கும் அதேநேரம் அவர்களும் தமிழின விடுதலை போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.