சிறிலங்கா இனவாத அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீகளுக்கு, ஐக்கிய நாட்டு மனித உரிமை பேரவை நம்பகத்தன்மை வாய்ந்த தீர்வை வழங்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான, துரைரெத்தினம் தெரிவித்தார்.
அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா தீவினுள் தமிழ் பேசும் மக்கள் பரந்துபட்டளவில் வாழ்ந்தாலும் வடகிழக்கிலேயே பெரும்பான்மையாக தமிழர்கள் வரலாற்று அடிச்சுவடுகளுடனும், ஒரு தேசிய இனத்திற்கான அங்கீகாரத்துடனும் வாழ்ந்து வருவது வரலாறாகும்.
மாறிமாறி ஆட்சி புரிகின்ற சிங்கள அரசு தமிழர்களுக்கு எதிராக மேற் கொள்ளுகின்ற விரோதமான செயற்பாடுகள் முற்றுப்பெறவில்லை.
கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட விரோதமான செயற்பாடுகள் ஊடாக தேசிய இனத்திற்கான அங்கீகாரத்தை இல்லாமலாக்குகின்ற செயல் திட்டமே முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக, அதிகாரப்பங்கீடு மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை, காணாமல் போனோர் விடயம், கைதிகளின்விடுதலை, தொடர்பாக இனவாத அரசின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், சமாதானமாக வாழ்வதற்கு உரிய நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
எனவே சர்வதேசம் தமிழ் மக்களுக்கான நல்ல தீர்வை எட்டுவதற்கு ஜெனிவாவின் கூட்டத்தொடர் நியாயமான முடிவுகளை எடுக்கும் என்னும் நம்பிக்கையுடன் தமிழ் மக்கள் எதிர் பார்த்த வண்ணம் உள்ளனர் என்று அவரது அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.