ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பூச்சிய வரைபில் அவசரமாக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென சிவில் அமைப்புக்களால் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜர் வாசித்துக்காட்டப்பட்டது.
அந்த மகஜரில், ஐ.நாவில் இடம்பெற்றுவரும் 46ஆவது மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மொண்டினீக்ரோ, வடக்கு மசடோனியா, மலாவி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இணையனுசரணைக் குழு முன்வைத்த இலங்கை மீதான முதலாவது வரைவுத் தீர்மானத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் எனக் கோருகின்றோம்.
இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும், சிறிலங்கா பாதுகாப்புப் படையினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தமிழ் பெண்களுக்கும் நீதி கோரி தமிழ் சமூகம் தொடர்ந்து போராடி வருகின்றது.
சிறிலங்கா அரசால் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்புக் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், திட்டமிட்ட இனப்படுகொலை, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறு கோரி இன்று நடைபெற்ற பேரணி ஊடாக தமிழ் சமூகம் தங்களை வலியுறுத்துகின்றது.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு இணையனுசரணை நாடுகளை வலியுறுத்தி மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தற்போதைய மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட், 2021 ஜனவரி 27 எனத் திகதியிட்ட தனது அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளை சிறிலங்காவின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஐ.நா.வின் முன்னாள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. வல்லுநர்கள் மற்றும் சிறிலங்கா தொடர்பான ஐ.நா. பொதுச்செயலாளர், வல்லுநர்கள் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் உட்பட இருபதிற்கும் மேற்பட்டவர்கள் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பரிந்துரைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
சிறிலங்காவை பொறுத்தவரையில் தனது சொந்த நீதிமன்றங்களினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவில்லை.
ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து உலகளாவிய அல்லது வேற்று அதிகார வரம்பு மூலம் நீதியைப் பெறுவதற்கான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை நாங்கள் எதிரொலிக்கிறோம்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற பொறுப்புக்கூறலுக்கான தற்போதைய சர்வதேச வழிகளைக் கருத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றுள்ளது.