சிரியாவில் அகதிகள் முகாமில் இடம்பெற்ற தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என்று, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் வடக்கு பகுதியில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள, அல் ஹவுல் (Al Hawl) அகதிகள் முகாமிலேயே, சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முகாமில் உள்ள ஒரு கூடாரத்தில், எரிவாயு கொள்கலன் வெடித்து தீ பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த தீ அருகில் இருந்த பெருமளவு கூடாரங்களுக்கும் பரவியதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில், 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 18 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.