சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில், இன்று காலை தொடக்கம் இந்த சுழற்சி முறை உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், கடந்த 27ஆம் நாள், லண்டனில் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அவரது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் கடந்த 28ஆம் நாள் தொடக்கம். நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டம் இன்று 4ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, மட்டக்களப்பிலும், சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது,





