தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் சிறிலங்கா அரசிற்கு எதிராக நடைபெற்றுவரும் தொடர் மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் அவற்றுக்குச் சமாந்தரமாக கனடிய மண்ணிலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை வியாழக்கிழமை தொடக்கம் ரொரன்ரோ, ஒட்டாவா, மொன்றியல், அல்பேட்டா ஆகிய நகரங்களில் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.
கனடியத் தமிழர் சமூகமும் கனடியத் தமிழர் மாணவர் சமூகமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் போராட்டங்களில், அனைத்துலக நீதிப்பொறிமுறைக்குள் சிறிலங்கா அரசினை கொண்டுவர வேண்டும், ஈழ தமிழர்களுக்கு நிகழ்ந்தது இன அழிப்பு என்பதை ஏற்று கொள்ள வேண்டும், ஈழ தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகள் சர்வதேசத்திடத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இப்பேராட்டங்களானது, ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்பிரகரம் நாளை ரொரண்டோவில் U.S. Consulate (360 University Ave) முன்பும், நாளை மறுதினம் ஒண்டாரியோ சட்டசபையின் முன்பும் ஆறாம் திகதி Yonge-Dundas உள்ள டண்டாஸ் சதுக்கத்திலும் ஏழாம் திகதி மீண்டும் டண்டாஸ் சதுக்கத்திலும் நடைபெறவுள்ளது.
இதேவேளை மார்ச் எட்டாம் திகதி சர்வதேச மகளிர் தினத்தன்று கனடா தமிழ் மகளிர் அமைப்பினால் நடாத்தப்படும் வாகனப்பேரணி, MARKHAM & STEELES இல் ஆரம்பிக்கவுள்ளதோடு ஒன்பதாம் திகதி ஒண்டாரியோ சட்டசபையின் முன்பும் ஒட்டாவாவில் நாடாளுமன்றிலிருந்தும் கியூபெக்கில் கியூபெக் சட்டசபையின் முன்பும் அல்போர்ட்டாவில் அல்போர்ட்டா சட்டசபையின் முன்பும் பேராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை ரொராண்டோவில் பத்தாம் திகதி Yonge & Bloor இலும் 11ஆம் திகதி U.S. Consulate 360 University Ave இலும் பேராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
போராட்ட வடிவங்கள் மாறினாலும் போராட்டங்கள் மாறாது என்று அறிவித்துள்ள ஏற்பாட்டாளர்கள், கனடிய கொரோனா விதிமுறைகளுக்கு அமையவே இந்த போராட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.