எதியோப்பியாவின் ரிக்ரே (Tigray) பிராந்திய நெருக்கடிகள் தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபையினால் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இது, எதியோப்பியாவின் உள்நாட்டு விவகாரம் என்று வலியுறுத்தியதை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரிக்ரே (Tigray) பிராந்திய நெருக்கடிகள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானத்துக்கு, பாதுகாப்புச் சபையில் உள்ள தற்காலிக உறுப்பு நாடுகளான கென்யா, நைஜர், துனிசியா ஆகியன, ஆதரவு அளித்ததாக, இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி AFP செய்தி வெளியிட்டுள்ளது.
எதியோப்பியாவின் இறையாண்மையை மதிக்கும் அதேவேளை, மோதல்களை நிறுத்தி, உடனடியாக மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வருமாறு கோருகின்ற கூட்டறிக்கையை வெளியிடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அண்மையில் எதியோப்பியாவினால் கைப்பற்றப்பட்ட அதன் பிராந்தியங்களில் ஒன்றான ரிக்ரே (Tigray)யில், பாலியல் மற்றும், பாலின அடிப்படையிலான வன்முறைகள், நீதிக்குப் புறம்பாக படுகொலைகள் உள்ளிட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.