பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்து சிறிலங்கா அரசாங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது பதிலை, இணையத்தில் வெளியிடுமாறு கோரி அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதன்படி சிறிலங்கா அரசாங்கத்தின் அந்த அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.வினால் வெளியிடப்பட்டுள்ள தகவலில், நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, மதத் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் பொது அமைப்புகள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த நேரத்தில் தேவையற்றது என்று வெளிப்படுத்திய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்
அதன் அடிப்படையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்த ஏற்பாடுகள் தொடரப்படவோ, மீளப்பெற்றுக்கொள்ளப்படவோ இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.